ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும்
நோக்கில் முன்னெடுக்கப்படும்
“அனைவருக்கும் சுத்தமான குடிநீர்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரண்டு பகுதிகளுக்கான குடிநீர் இணைப்பினை வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின், பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, முதலைக்குடா மற்றும் அம்பிளாந்துறை ஆகிய பகுதிகளுக்கான குடி நீர் வழங்கும் திட்டத்தினை பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆரம்பித்துவைத்துள்ளார்.
பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இவ்விரு கிராமங்களிலும் இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக சுமார் 750 குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், இதற்காக இராஜாங்க அமைச்சரின் சிபாரிசின் அடிப்படையில் சுமார் 65 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.புஸ்பலிங்கம், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் வை.சந்திரமோகன், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச்செயலாளர்கள்
உட்பட நீர் வழங்கல் அதிகார சபையின் அதிகாரிகள் ஏனைய அரச திணைக்களங்களின் அதிகாரிகள், மற்றும் பிரதேச வாசிகள் என பலரும் கலந்துகொண்டனர்.