யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நிலமை கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றது என மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளது என மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில் இன்று 323 குடும்பங்களைச் சேர்ந்த 595 பேர் மட்டுமே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்தோடு மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனர் மேலதிக சிகிச்சைக்காக இரணவில கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்றும் கணபதிப்பிள்ளை மகேசன் கூறினார்.