((ஜெ.ஜெய்ஷிகன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியின் காரணமாக அழிவின் விழிம்பிலிருந்த சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான நீர்ப்பாசனத்தை அம்பாறை மாவட்ட களுகல் ஓயாவிலிருந்து பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபருக்கு கலாபூசணம் ஞானமுத்து பேரின்பம் தலைமையிலான மட்டக்களப்பு விவசாய அமைப்புகள் 13 இணைந்து இன்று (15) மாவட்ட செயலகத்தில் வைத்து பாராட்டுத் தெரிவித்தனர்.
புளுக்குணாவி குளத்து நீரைநம்பி விசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கடந்த மே மாதம் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் முறையிட்டதையடுத்து அரசாங்க அதிபரின் தீவிரமுயற்சியினால் அயல் மாவட்டமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உரையாடியதைத்தொடர்ந்து சேனநாயக சமுத்திரத்தில் இருந்து நீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து அம்பாறை மாவட்டத்திலிருந்து நீர்ப்பாசனம் கிடைக்கப் பெற்று நெற்செய்கை பண்ணப்பட்டு தற்பொழுது அவை அறுவடை செய்யும் கட்டத்தினை எய்தியுள்ள நிலையிலேயே இவ்விவசாய அமைப்புக்களால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பாராட்டுக்கடிதங்களும் வழங்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா விவசாயிகளால் அறுவடை செய்யப்படும் நெல்லினை அரசாங்கத்தினால் 50 ரூபாவிற்கு கொள்வணவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அறுவடை செய்யப்படும் நெல்லினை விவசாயிகள் காயவைத்து கூடிய விலைக்கு விற்பனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். மேலும் விவசாயிகளுக்கு கடணடிப்படையில் விதைநெல் மற்றும் மருந்துவகைகளை வழங்கி குறைந்த விலையில் நெல்லைக் கொள்வணவு செய்து கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் நபர்களிடமிருந்து ஏழை விவசாயிகள் மீண்டு வரவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இப்பாராட்டுத் தெரிவிக்கும் நிகழ்வில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர். வை.பீ. இக்பால், மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன் உட்பட குருக்கள் மடத்தார் வட்டை, 40 வட்டை, முதளைமடு, ஆத்துச் சேனை, மாவடி மும்மாரி, ஆலயடி மும்மாரி, முதளைமடு கோபால் அமைப்பு, பட்டிப்பளை, நெடியமடு, கிளாக்கொடிச் சேனை, மிலாத்துச்சேனை, தேவிலா முனை, பட்டிப்பளை இறகு வெளி போன்ற 13 விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தில் நெற்செய்கை மற்றும் மறுவயல் பயிற்செய்கை உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய மாவட்ட செயலகம் தொடர்ச்சியான நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.