முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் மாலை 6 மணி 18 ஆவது நிமிடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு மக்கள் இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவிக்கையில், “இந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு கொரோனாவின் பாதிப்பு இருக்கின்ற நேரத்திலே வருகின்றபடியால் பலவிதமான தடங்கல்களை நாங்கள் எதிர்நோக்க இருக்கின்றோம்.
முள்ளிவாய்க்காலுக்குச் சென்று எங்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் வண்ணம் விளக்குகளை ஏற்றி மௌனமாக இறந்தவர்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு சூழல் தற்போது இருக்கின்றதோ என்று எங்களுக்குக் கூறமுடியாது இருக்கின்றது.
அவ்வாறு செய்யக் கூடியவர்கள் அங்கு சென்று ஒரு விளக்கேற்றி மௌனமாக அஞ்சலி செலுத்தி வரக்கூடும் என்றால் மிகவும் நன்று.
தற்போதைய நிலையைப் பார்க்கும்போது பொலிஸாருடைய, படையினருடைய எதிர்ப்புகள் இவற்றில் இருப்பதை நான் காண்கின்றேன்.
அதில் இருக்கின்ற சிக்கல் என்னவென்றால் அவ்வாறானவர்களை தடுப்பு முகாமுக்குக் கொண்டுபோக எத்தணிக்கிறார்கள். அப்படியானால் 14 நாட்கள் அவர்களைக் கொண்டுபோய் வைத்திருக்கக்கூடும்.
ஆகவே, முடியுமான மக்கள் அங்கு சென்று தங்களுடைய மனநிலையை வெளிப்படுத்தும் வண்ணம் நாங்கள் நடவடிக்கையில் இறங்கலாம்.
ஆனால், எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரையில் நாங்கள் இரண்டு விடயங்களை அன்றைய தினம் செய்ய இருக்கின்றோம்.
இறந்த மக்களினுடைய நினைவாக பயன்தரும் மரங்களை நாட்ட இருக்கின்றோம். இதை 16ஆம் 17ஆம் 18ஆம் திகதிகளில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இதேவேளை, உலகம் பூராகவும் எங்களுடைய தமிழ் உறவுகள் அன்றைய தினம் 18.18.18 இற்கு அதாவது 18ஆம் திகதி மாலை 6 மணி 18 நிமிடத்திற்கு ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டிலே இறந்தவர்களை நினைத்து விளக்குகள் ஏற்ற வேண்டும்.
இது இலங்கையில் மாத்திரமன்றி எத்தனையோ நாடுகளிலே அன்றைய தினம் நடைபெறுகின்றது.
உதாரணமாக எங்களுடைய நாட்டிலே அந்த நேரத்தில் செய்யும்போது அவுஸ்திரேலியாவில் 5 அல்லது 6 மணித்தியாலம் வித்தியாசமாக இருக்கும். இங்கிலாந்தில் வித்தியாசமாக இருக்கும்.
ஆகவே, அந்தந்த நாடுகளிலேயே 18.18.18 இற்கு நாங்கள் விளக்குகளை ஏற்ற இருக்கின்றோம். விளக்குகளை ஏற்றி இறந்தவர்களை நினைத்து அவர்களுடைய எதிர்பார்ப்பின் படி வரும்காலம் நல்லதொரு காலமாக வடகிழக்கு மாகாண மக்களுக்கு அமைய வேண்டும் என்று சிந்திப்போமாக” என்று குறிப்பிட்டுள்ளார்.