உலக நாடுகளின் ஆதரவு அதிகரித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
விமானப்படை சார்பில் டெல்லியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. உலக அமைதிக்காக பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை அழிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி அந்த நாட்டில் விஐபி ஆக வாழ்ந்து வந்தார். இந்தியாவின் நடவடிக்கையால் அவர் இப்போது சிறையில் இருக்கிறார். தீவிரவாதம் மூலம் இந்தியாவுக்கு எதிராக மறைமுக போரில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.
பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டுகளை வீசி அழித்தது. இதன்மூலம் எல்லை தாண்டி பதுங்கி இருந்தாலும் தீவிரவாதிகளை இந்தியா அழிக்கும் என்பதை உலகுக்கு எடுத்துரைத்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.