இருக்கும் இந்த அரசாங்கத்திடம் இருந்து ஒரு துளி நியாயத்தைக்கூட எதிர்பார்க்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.
இதேவேளை, யுத்த காலத்தில் இராணுவப் பாதுகாப்பு எப்படி இருந்ததோ அவ்வாறே வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்கவில்லை என்பதால் தமிழ் மக்களைப் பழிவாங்குகிறாரா எனவும் கேட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், “ஜனாதிபதி தானே நியமித்த நீதிபதியின் முன்பு அவரே சென்று சாட்சியம் வழங்கி, அவரே தீர்ப்பு வழங்க முற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிபதிகளுக்கு முன்பே அவர் நிறுத்தப்பட வேண்டும். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை இவ்விடயத்தில்கூட ஐ.நா. சபை உருப்படியாக நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
எனவே எதிர்வரும் காலங்களிலாவது, இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்ட பின்னராவது சரியான ஒரு நடவடிக்கையை எடுக்க ஐ.நா. முயற்சிக்க வேண்டும். மேலும் உள்ளூர் விசாரணை என்பது எப்படி அமையும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாக அமையும்.
குற்றவாளிகளும் அவர்களே, நீதிபதிகளும் அவர்களே என்ற ரீதியில் இருக்கும் இந்த அரசாங்கத்திடம் இருந்து ஒரு துளி நியாயத்தைக்கூட எதிர்பார்க்க முடியாது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுக்கான சூத்திரதாரிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவை பற்றிய ஒழுங்கான அறிக்கை தயாரிக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை இந்த அரசாங்கம் கிடப்பில் போட்டுவிட்டது.
இந்நிலையில், மன்னார் மனிதப் புதை குழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை ஒழுங்காக பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அந்த எலும்புக் கூடுகள் யாருடையது, எந்தக் காலத்துக்கு உரியது என்ற நம்பகமான அறிக்கையை வெளியிட இந்த அரசாங்கம் தயங்குகிறது.
வடக்கில் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவச் சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். யுத்த காலத்தில் இராணுவப் பாதுகாப்பு எப்படி இருந்ததோ அவ்வாறே அனைத்துப்பகுதிகளிலும் உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தனக்கு தமிழ் மக்கள் வாக்களிவில்லை என்று தமிழ் மக்களை பழிவாங்குகிறாரா? இவ்வாறான சோதனை நடவடிக்கைகளால் தமிழ் மக்களை அடிபணிய வைத்துவிடலாம் என்று ஜனாதிபதி கனவு காண்கிறாரா?
இவ்வாறான அடக்குமுறைகளை நேரடியாகக் கண்காணிப்பதற்கு ஐ.நா. அலுவலகம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்துப் பகுதிகளில் திறக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழ் மக்களின் ஜனநாயக வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்படும்” என அறிவிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.