பொலிஸாரினால் 6 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி W.B.M.A அமரசிங்கவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பதிகாரி எம்.சி.சேனசிங்கவின் ஆலோசனையில் இந்த சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தேடுதலில், குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.கே.பண்டார தலைமையிலான எஸ்.ஐ.சந்திரகுமார, ரதனசிறி, கமகே, ரத்னாயக்க, சந்தண, திசாநாயக்க, டிகிரிபண்டா, சசிக ஆகியோர் அடங்கிய பொலிஸ் அணியினர் தேடுதலை மேற்கொண்டனர்.
இதன்போது, சுதந்திரபுரம் பகுதியில் சந்தேகத்தின்பேரில் மூவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவர்களை அழைத்துச் சென்ற நிலையில் அடையாளப்படுத்திய இடத்தில் சுண்டிக்குளம் கடற்கரைப் பகுதியில் மண்ணினுள் புதைத்து வைத்திருந்த நிலையில் சுமார் 6 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது.
அத்துடன் குறித்த மூவரையும் கைதுசெய்த பொலிஸார் அவர்களின் மோட்டார்சைக்கிள்கள் இரண்டினையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கஞ்சாவின் பெறுமதி பத்து இலட்சம் வரை இருக்கும் எனவும் கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.