
பாதுகாப்பு பணியில் 1600 பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருப்பதியில் ஜனவரி 6ஆம் திகதி வைகுண்ட ஏகாதசியும், 7ஆம் திகதி வைகுண்ட துவாதசி விழாவும் நடைபெறள்ளன. வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அன்று கோயிலில் அதிகாலை நேரத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொடுப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடைபெற்றது.
கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி தலைமை தாங்கியிருந்தார்.
அவர் கூறுகையில், “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பக்தர்களுக்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க திருமலை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்படும்.
பாதுகாப்புப் பணியில் தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள், ஊழியர்கள், பொலிஸார் ஈடுபடுவார்கள். பாதுகாப்புப் பணியில் 1600 பொலிஸார் நியமிக்கப்படுவார்கள்.
கோயிலில் 5 ஆம் நள்ளிரவில் அனைத்துப் பூசைகளும் முடிந்ததும், 6 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் நடை திறக்கப்பட்டு மார்கழி மாத பூசைகள் நடைபெறும். அதைத்தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
முதலில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக வலம்வந்தவுடன் அங்கு பக்தர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்படுகிறார்கள். அனைவரும் ஏழுமலையானை வழிபட ஏற்பாடு செய்யப்படும்.
ரிங் வீதியில் இருந்து வைகுண்டம் கியூ சதுக்கம் வரை தரிசன வரிசைகள் அமைக்கப்படும். தரிசன வரிசையையொட்டி வைகுண்டம் கியூ சதுக்கத்தில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கப்படும்.
பக்தர்களுக்குச் சேவை செய்ய ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், சாரண-சாரணியர்கள், தேசிய மாணவர் படையினர் ஆகியோர் ஈடுபடுத்தபடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
