எந்தவகையில் தீர்ப்பு வழங்கினாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மைதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கவுள்ள நிலையில் காதர் மைதீன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்த அவர், “பாபர் மசூதி தொடர்பாக உச்சநீதிமன்றம் எந்த வகையில் தீர்ப்பு அளித்தாலும், அதனை சம்பந்தப்பட்ட அனைவரும் முழு மனதோடு ஏற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிலம் தொடர்புடைய வழக்கை மதம் தொடர்புடைய வழக்காக மாற்றக் கூடாது. அது பற்றி ஏற்கனவே மும்பையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து ஏற்று நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் சமூக நல்லிணக்கத்தை பேணி பாதுகாத்து நிலை நிறுத்த வேண்டும். இந்த தீர்ப்பே இறுதித் தீர்ப்பு என்பதால் அதனை வழக்கிற்கு தொடர்புடையவர்கள் ஏற்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.