வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரி தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்தது.
மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி, சந்தான குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் சந்தான குமார் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி மனு தாக்கல் செய்தார்.
குறித்த மனு மீதான வழக்கின் விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சந்தான குமாரின் வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று தெரிவித்து, கனிமொழியின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.