தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் அருகே செய்தியாளர்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த விவகாரத்தை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்தி விட்டன. நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவன்.
நான் பாஜகவில் சேரப்போவதாக வரும் தகவல் பற்றி கேட்கிறீர்கள். அவர்கள் சொல்வார்கள். முடிவெடுக்க வேண்டியது நான்தான். அதற்காக, அவர்கள் என்னை நம்பிதான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. தொடர்ந்து நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன்.
தமிழகத்தில் இன்னும் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது. அயோத்தி வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதிகாக்க வேண்டும். மிசாவில் ஸ்டாலின் கைது பற்றி கேட்கிறீர்கள்.
அதுபற்றி எனக்குத் தெரியாது. தெரியாதது பற்றி கருத்துச் சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.