சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தியாகராய நகரில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.39.86 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் ரூ.19.11 கோடி மதிப்பீட்டில் 23 சாலைகள் சீர்மிகு சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.
வாகன எரிபொருள் மூலம் வெளியேறும் எரிவாயுவை குறைத்து மோட்டார் வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் தியாகராய நகரில் உள்ள தியாகராய சாலையில் மூத்த குடிமக்கள், குழந்தைகள், பாதசாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் எளிதாக செல்லும் வகையில், இந்த நடைபாதை வளாகம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த நடைபாதை வளாகம் பொதுமக்கள் அமர்வதற்கு ஏதுவாக இருக்கைகள், பிரகாசமான தெரு விளக்குகள் போன்ற வசதிகளுடன் உலக தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சாலைகள் சீர்மிகு சாலைகளாக மறுவடிவமைப்பு செய்ய தேர்வு செய்யப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்பான செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் உகந்த நடைபாதை, வேகக் கட்டுப்பாடு, தெர்மோ பிளாஸ்டிக் வண்ணங்களை பயன்படுத்தி சாலை போக்குவரத்து குறியீடுகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஆகிய வசதிகளுடன் இந்த சீர்மிகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.