
சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமையினர் நேற்று (சனிக்கிழமை) நடத்திய சோதனையில், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு சதி திட்டம் தீட்டியதற்கான முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சென்னை, நாகையில் நடைபெற்ற சோதனையில் 3 பேர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருப்பதை என்.ஐ.ஏ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அதற்கமைய குறித்த 3 சந்தேகநபர் மீதும் தடுப்புச் சட்டம், சதி வேலைக்கு நிதி திரட்டியது, தீவிரவாத குழுவை உருவாக்க முயற்சித்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 3 பேரையும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை சென்னை மண்ணடியில் செயற்பட்டு வரும் ‘வஹாதத்தே இஸ்லாமி ஹிந்த்’ அமைப்பின் அலுவலகத்தில் தேசிய புலனாய்வு சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர் வேப்பேரியிலுள்ள அந்த அமைப்பின் தலைவர் சையத் முகமது புகாரியின் வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது, தொலைபேசிகள், மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து சையத் முகமதுவை கிண்டியிலுள்ள என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோன்று நாகை மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த அசன் அலி, மஞ்சக்கொல்லையை சேர்ந்த ஹாரிஸ் முகம்மது வீடுகளிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் பலமணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர். இதில், மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ், புத்தகங்கள், துண்டுபிரசுங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர் அசன் அலி, ஹாரிஸ் முகம்மது ஆகியோரை நாகை எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் நள்ளிரவு வரை விசாரணை நடத்தியதுடன், இன்று சென்னைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
