
தண்ணீருக்காக தீட்டப்பட்ட தடுப்பணை திட்டங்கள் நிதி ஒதுக்கப்படாமல் முடங்கிக் கிடப்பதாக, அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தண்ணீருக்காக தீட்டப்பட்ட தடுப்பணை திட்டங்கள் நிதி ஒதுக்கப்படாமல் முடங்கிக் கிடப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பாலாற்றில் 7 இடங்களில் தடுப்பணைகளைக் கட்டுவதற்காக ரூ.252 கோடியில் ஓராண்டுக்கு முன்பு திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 3000 ஹெக்டேர் விவசாய நிலம் பாசனம் பெறுவதுடன் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்கும் நாள் தோறும் 80 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர்.
அதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயரும் வாய்ப்பு உள்ளது. இதில் இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி நிலையமும்,நபார்டு வங்கியும் தலா ஒரு தடுப்பணை கட்டுவதற்கான நிதியைத் தருவதாக கூறியிருக்கின்றன.
எஞ்சிய 5 தடுப்பணைகளுக்கான நிதி ஒதுக்கவோ, அல்லது அதற்கான நிதியை வேறு அமைப்புகளிடம் இருந்து பெற்று திட்டத்தைச் செயல்படுத்தவோ பழனிச்சாமி அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இத்தனைக்கும் பழனிச்சாமியின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுப்பணித்துறைதான் இந்த தடுப்பணை திட்டங்களைக் கையாண்டு வருகிறது. ஆனாலும் திட்டம் வகுக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் கிடப்பிலேயே இருக்கிறது.
தண்ணீருக்காக போடப்படும் இத்தகைய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாமல் முடங்கிக்கிடக்கும் நிலையில், ஜி.எஸ்.டி. வரியில் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத்தொகை 5,400 கோடி ரூபாய் இருக்கிறது.
ஜி.எஸ்.டி.யில் மட்டுமே இந்த நிலவரம். தமிழகத்திற்கு வர வேண்டிய மற்ற நிதிகளைத் தராமல் மத்திய அரசு எப்படி எல்லாம் வஞ்சிக்கிறது என்று பட்ஜெட் தாக்கலின் போது ஓ.பன்னீர் செல்வம் சொன்னதை எல்லாம் விவரித்தால் பட்டியல் நீளும். இவர்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து எப்படி மாநில நலனுக்குப் பாடுபடுகிறார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது அல்லவா?
இனிமேலும் இப்படியே இருக்காமல் வரவிருக்கிற மத்திய அரசின் வரவு செலவு திட்டத்திலாவது வறட்சியில் தத்தளிக்கும் தமிழகத்திற்குத் தர வேண்டிய நிதியைப் பெறுவதுடன் கூடுதலாக சிறப்பு நிதியைக் கேட்டு வாங்குவதற்கான நடவடிக்கைகளை பழனிச்சாமி அரசு எடுக்க வேண்டும்.
எதிர்வரும் ஆண்டுகளிலும் வறட்சி நீடிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், சிறப்பு நிதியின் மூலம் தமிழகம் முழுக்க தண்ணீருக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
