
தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கனிமொழி, பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவில் கனிமொழி 3.47 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பான மனுவில், கனிமொழியின் வேட்புமனுவில் குறைபாடுகள் இருந்தது, அது குறித்த புகார்களை தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான விடியோ ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கணவர் மற்றும் மகனின் குடியுரிமை சான்றிதழ்களை இணைக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழிசை சௌந்தரராஜன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
