நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இன்சுலினின் விலை அமெரிக்காவில் அதிகமாக இருப்பதால், அமெரிக்கர்கள் இன்சுலினின் பிறப்பிடமான கனடாவை நோக்கி படையெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மின்னசோட்டாவிலிருந்து கரவன் டூ கனடா (Caravan to Canada) என்று அழைக்கப்படும் ஒரு குழு ஒன்ராரியோவிலுள்ள லண்டனை சென்றடைந்தது.
வகை 1 நீரிழிவு நோய்க்கான மருந்தை பெற்றுக் கொள்வதே அந்தக் குழுவினர் வந்த நோக்கமாக உள்ளது. கரவன் குழுவில் சுமார் 20 பேர் உள்ளடங்குகின்றனர். அவர்களில் ஒருவரான Nicole Smith-Holt என்பவர் தனது 26 வயது மகனுக்கு முறையாக இன்சுலின் பெற்றுக் கொடுக்க முடியாததால் மகனை பறிகொடுத்த தாயாராவார்.
இன்சுலினை பெற்றுக் கொள்வதற்காக ஸ்மித் ஹோல்ட் இரண்டாவது முறையாக கனடாவுக்கு சென்றுள்ளார். ஆரம்ப காலத்திலும் இன்சுலினை பெற்றுக் கொள்வதற்காக மெக்சிகோவுக்கும் கனடாவுக்கும் அலைந்து திரிந்தது போலவே தற்போதும் அமெரிக்கர்கள் அதனை தேடி அலைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஆண்டொன்றிற்கு இன்சுலினுக்காக செலவிடும் தொகை, 2012 ஆம் ஆண்டில் 2,864 டொலர்களாக இருந்தது, 2016 இல் ஏறக்குறைய இரட்டிப்பாகி 5,705 டொலர்கள் ஆனது.
அமெரிக்காவின் மின்னசோட்டாவில் ஒரு இன்சுலின் மருந்து போத்தலின் விலை 320 டொலர்களாக இருக்கும் நிலையில், கனடாவில் அதே இன்சுலின் போத்தல் ஒன்றின் விலை வெறும் 30 டொலர்களாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு படையெடுத்துள்ள கரவன் குழுவினர், லண்டனிலுள்ள Banting House என்னும் இடத்தை சந்தித்து செல்லவுள்ளது.
அதற்கு முக்கிய காரணம், Banting House என்ற இடம் இன்சுலினின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. தனது சகாவான சார்ளஸ் பெஸ்ட்டுடன் இணைந்து இன்சுலினைக் கண்டுபிடித்த கனேடிய அறிவியலாளரான ஃபிரெட்ரிக் பான்டிங் (Frederick Banting), அங்குதான் 1920 முதல் 1921 வரை வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இன்சுலின் தொடர்பான ஆராய்ச்சிகளில் பெரும்பாலானவற்றை ரொறெண்ரோ பல்கலைக்கழகத்திலும், ரொறெண்ரோவிலுள்ள பான்டிங் நிறுவனத்திலும்தான் அவர் நடத்தியுள்ளார்.
அதேவேளை, அமெரிக்காவும் நியாயமான விலையில் இன்சுலின் கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
