
தமிழகத்தில் ஆவணக் கொலைகள் அதிகரித்து வருவது தொடர்பாக, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அறிவித்துள்ளனர்.
அதன்படி இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தபோது , சாதாரண அமைப்புகள் முதல் சட்டப்பேரவை வரை சாதிதான் ஆதிக்கம் செலுத்துகிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் பள்ளி செல்லும் குழந்தைகளின் கையில் வண்ணக்கயிறு கட்டி சாதி அடையாளப்படுத்தப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், ரத்தத்திலோ, உடல் உறுப்பு தானத்திலோ யாரும் சாதி பார்ப்பதில்லை எனக் குறிப்பிட்டனர்.
விழிப்புணர்வு ஏற்படுவதாக அரசு கூறினாலும் ஆவணப்படுகொலைகள் நடக்கின்றன எனத் தெரிவித்த உயர்நீதிமன்றம், ஆவணப்படுகொலையை தடுக்க வேண்டும் எனக் கூறும் காட்சிகள் தான் சாதியையும் ஊக்குவிக்கின்றன எனக் குறிப்பிடப்படுகிறது.
மேலும் ஆவணப் படுகொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
