
அத்துடன், சஹ்ரானின் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “இந்த நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலில் நூற்றுக்காணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த உயிரிழப்புக்கள் யாரால் ஏற்படுத்தப்பட்டது, என்ன காரணம் என கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதனடிப்படையிலே இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமருமே பதில்கூற கடமைப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.
சர்வதேச புலனாய்வுத் துறையினர் துல்லியமான தகவல்களை எமது நாட்டின் புலனாய்வுத் துறையினருக்கு வழங்கியிருந்தனர். எனினும் இந்தத் தகவலைப் பெற்று அரசாங்கம் சரியாகச் செயற்படாத காரணத்தினால் ஏற்பட்ட இந்த இழப்புக்களுக்கு இரு தரப்பினரும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
ஆனாலும் இதற்கான கூடுதல் பங்கை ஜனாதிபதி ஏற்கவேண்டும். ஏனென்றால் நாட்டின் பாதுகாப்புத்துறை, சட்டம் ஒழுங்கு போன்ற துறைகள் அவரிடமே இருக்கின்றது.
ஆகவே அவர் உரிய நேரத்தில் பாதுகாப்புச் சபையைக் கூட்டி நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாமல் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். எனவே, இந்தப் பொறுப்பை ஜனாதிபதி ஏற்கவேண்டும்.
இதேவேளை, சஹ்ரானின் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் 185 பேரே இருக்கின்றனர் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனாலும் ஆயிரக்கணக்கில் அவர்கள் இருக்கின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
