
பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பை சட்டப்புறம்பான அமைப்பாக மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதால் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில அரசின் கருத்துகளை அறிந்த பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உட்துறை அமைச்சின் உயரதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என சீக்கியர்களின் காலிஸ்தான் அமைப்பு போராடி வருகிறது. இந்த அமைப்புக்கு அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு ஆதரவு வழங்குகிறது.
இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கனடா, பிரித்தானியா,அவுஸ்ரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களின்போது குரல் எழுப்பி வருகின்றனர்.
பஞ்சாப்பை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக அடுத்த ஆண்டு அங்குள்ள சீக்கியர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
