LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°Cஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, July 6, 2019

ஏழை மக்களுக்கு கசப்பை ஏற்படுத்தியுள்ள பட்ஜெட்: தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது – ஸ்டாலின்

ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு கசப்பையும்,
தனியார் கம்பனிகளுக்கு இனிப்பையும் மத்திய பட்ஜெட் வழங்கியுள்ளதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், தமிழகத்திற்கென்று எந்த பிரத்தியேகத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ள 2019-2020ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடர்பாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கை, வழக்கம் போல் அலங்கார வார்த்தைகளும், அறிவிப்புகளும் நிறைந்த அணிவகுப்பாகக் காட்சியளிக்கிறதே தவிர கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் வகையில், மாநிலங்களின் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் பிரதிபலிக்கப்படவில்லை. இது காதுக்கு விருந்தே தவிர, கருத்துக்கு விருந்தில்லை.

சாமானிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச மானியத்தையும் பறிக்கும் முழக்கமே பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, போக்குவரத்துக் கட்டண உயர்வு- அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு என்பதில்தான் இது போய்முடியும்.

50 இலட்சம் கோடி நிதி திரட்டும் வகையில் ரயில்வே தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்பானது, சாதாரண மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிக முக்கியமான ரயில் போக்குவரத்தை பொது மக்களிடமிருந்து தட்டிப் பறித்து, செல்வந்தர்களுக்குத் தாரை வார்ப்பதைப் போல் இருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களில் அரசு வைத்துள்ள 51 சதவீதப் பங்கையும் கூட, குறைத்துக் கொள்ளலாம் என்று கொள்கை முடிவை அறிவித்து நீண்ட காலமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பா.ஜ.க. ஆட்சியில் முழுவதுமாக மூடு விழா நடத்திவிடுவார்கள் போலிருக்கிறது.

2019-20ஆம் நிதியாண்டில் மட்டும் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் கோடி ரூபாயை பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் திரட்ட வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு மத்திய அரசு நிற்பது பெரும் கவலையளிக்கிறது.

தமிழகத்திற்கென்று எந்த பிரத்தியேகத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நதிகள் இணைப்புத் திட்டம் பற்றி நிதி நிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை. குறிப்பாக கோதாவரி- கிருஷ்ணா- காவிரி நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தில் தவிக்கும் தமிழ்நாட்டிற்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்த 1,000 கோடி ரூபாய் நிதியைக் கூட இந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கவில்லை.

தனிநபரின் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்தாத பா.ஜ.க. அரசு, தங்களுக்காகத் தேர்தலில் பாடுபட்டு, வெற்றிக்கு வழி அமைத்துக் கொடுத்த தனியார் நிறுவனங்களுக்கு கரிசனை காட்டுகிறது. குறித்த நிறுவனங்களுக்கு வரிச்சலுகையை அளித்துள்ள அரசு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் ஏழை மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

பத்திரிகைகள் அச்சடிக்கத் தேவையான நியூஸ் பிரிண்ட் இறக்குமதிக்கு, புதிதாக பத்து சதவீதம் சுங்க வரி விதித்திருப்பது அச்சு ஊடகங்களை அடியோடு முடக்கி, செய்திப் பரவலையும் கருத்துச் சுதந்திரத்தையும் தகர்த்திடும் தந்திரமாக இருக்கிறது.

மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பு இல்லாமல், அதைப்பற்றிய கவலையே இல்லாமல், மேல்தட்டு மனப்பான்மையுடன், உப்பரிகையிலிருந்து இந்த நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைத்தான் இந்த அறிவிப்புகள் வெளிக்காட்டுகின்றன.

இந்த நிதிநிலை அறிக்கை ஏழை எளிய நடுத்தர மக்களைக் கணக்கில் கொள்ளவில்லை, கசப்பைத் தந்திருக்கிறது. ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு இனிப்பை வழங்கியிருக்கிறது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7