
கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “30 ஆண்டுகளுக்குப் பின்னரும், யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் தமிழரின் நிலத்தை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருப்பது அநீதியானதாகும்.
அந்த நிலங்களை இராணுவத்தினர் விட வேண்டும். நிலங்களை கையகப்படுத்துவது நாட்டில் சமாதானத்தையோ அல்லது நாட்டில் பாதுகாப்பையோ ஏற்படுத்தாது.
அந்த நிலங்களை விடுவிப்பதன் மூலமும், மக்களில் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதன் மூலமாகவுமே இந்த நாட்டில் அமைதியும் நாட்டின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.
இதேவேளை, இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்தபோது, இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கை இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக கூறினார்.
ஆகவே, மக்களின் நிலங்களை விடுவித்து, தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலம் நாட்டில் நிரந்தர சமாதானத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்தார்.
