
தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநருக்கு நினைவூட்டல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறையை தொடர்ந்து உயர்நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடிய நிலையில் முக்கிய வழக்குகள் பல விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தவகையில், ஏழுபேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ள நிலையில், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ஜுலை மாதம் 30ஆம் திகதி விசாரணை செய்யுமாறு தமிழக அரச தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் விளக்கம் பெற்று தெரிவிக்க ஏற்கனவே அவகாசம் கோரினீர்கள், இருப்பினும் இன்னும் ஏன் தாமதம் என நீதிபதிகள் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த அரச தரப்பினர், ஆளுநருக்கு இது குறித்து நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பு வாதபிரதிவாதங்களை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணை ஜுலை மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன், நளினி உட்பட எழுவர் சுமார் 28 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததுடன், மனித சங்கிலி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இவர்களின் விடுதலை குறித்து ஆளுநர் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
