தெற்கு லண்டன், பெக்கம் பகுதியைச் சேர்ந்த ஆரோன் மக்கன்சி என்ற 25 வயதான நபர் தோர்ன்ரன் ஹீத் பகுதியில் வசித்த எட்டுமாதக் கர்ப்பிணிப் பெண் கெல்லி மேரி ஃபோவ்ரெல்லைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
ஜூன் 29ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் கெல்லி மேரி ஃபோவ்ரெல்லின் வீட்டில் இச் சம்பவம் நடந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
8 மாதக் கர்ப்பிணியாக இருந்த கெல்லி மேரி ஃபோவ்ரெல் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு உடனடியாக சத்திர சிகிச்சை மூலம் குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
கெல்லி மேரி உயிரிழந்த நான்கு நாட்களின் பின்னர் அவரது ஆண் குழந்தையும் மருத்துவமனையில் உயிரிழந்தது.
இந்தச் சம்பவத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்ட கொலைச் சந்தேகநபர் ஆரோன் மக்கன்சி இன்று திங்கட்கிழமை கம்பர்வெல் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதி விசாரணைக்காக முன்நிறுத்தப்பட்டார்.
கொலையாளி தனது பெயர், பிறந்த திகதி மற்றும் பிரிதானியப் பிரஜை என்பதை உறுதிப்படுத்தியபோதிலும் தனது முகவரியைக் கொடுக்கவில்லை.
நாளை மறுதினம் புதன்கிழமை ஓல்ட் பெய்லி நீதிமன்றில் மீண்டும் விசாரணை நடைபெறும் என்று மாவட்ட நீதிபதி கரீம் எசாட் தெரிவித்தார்.
அதேவேளை மேலதிக விசாரணை ஓகஸ்ற் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது.