
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமர்வின்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்கவே நாம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபித்தோம்.
இதுகுறித்து நாம் கட்சித்தலைவர்களின் கூட்டத்திலும் கலந்துரையாடிய பின்னரே, விசாரணைகளை ஆரம்பித்தோம்.
அத்தோடு, 20 வருடங்களுக்குப் பின்னர் சமகாலத்திற்கு ஏற்றவகையில், நாம் நிலையியற் கட்டளைகளையும் மாற்றியமைத்துள்ளோம்.
இந்த நிலையில், தெரிவுக்குழுவின் விசாரணைகளால், இந்த விவகாரம் குறித்து தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்கு இடையூறுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து எனக்கு ஜனாதிபதி செயலகத்தினால் கடிதமொன்றும் அனுப்பப்பட்டது.
எனினும், அந்தக் கடிதத்தில் சில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததே ஒழிய, சபையில் சமர்ப்பிக்க வேண்டிய அளவுக்கு முக்கியமான ஒன்றாக கருதப்படவில்லை. அத்தோடு, எமக்கு ஒரு வாரத்துக்கு நான்கு முதல் ஐந்து கடிதங்கள் கிடைக்கின்றன. இவை அனைத்தையும் சபையில் சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை.
ஜனாதிபதியிடமிருந்து முக்கியமான அறிவிப்புக்கள் எதுவும் வந்தால் மட்டுமே அது சபையில் சமர்ப்பிக்கப்படும்.
அத்தோடு, தெரிவுக்குழுவை ஸ்தாபித்த பின்னர்தான் ஈஸ்டர் விவகாரம் குறித்து வழக்கு தொடரப்பட்டது.
எனவே, தெரிவுக்குழுவின் விசாரணைகளை இடைநடுவில் எம்மால் நிறுத்தமுடியாது. நாம் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு இணங்கவே செயற்பட்டு வருகிறோம்.
மேலும், வழக்கு விசாரணைகளுக்கு பாதகம் ஏற்படும் விடயங்களை, இரகசியமாகக் கூறவும் நாம் அனுமதி வழங்கியுள்ளோம்.
அனைத்தையும் வெளிப்படையாக கூறவேண்டிய தேவை இல்லை. எவ்வாறாயினும், தெரிவுக்குழுவின் விசாரணைகளை இடைநடுவில் நிறுத்துமாறு பணிக்க எனக்கு அதிகாரம் கிடையாது என்பதை நான் சபையில் தெரிவித்துக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.
