
முன்னணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் 10ஆம், 11 ஆம் திகதிகளில் இது மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தடுப்பதற்கும், நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு தவறியமை மற்றும் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் நடத்தப்பட்ட இன ரீதியான வன்முறைகளைத் தடுக்கத் தவறியமை ஆகிய காரணங்களை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணி இந்த நம்பிக்கையில்லா பிரேரணையைச் சமர்ப்பித்துள்ளது.
மேலும், குறித்த பிரேரணையை வெற்றிகொள்வது தொடர்பில் ஆளும் தரப்பினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில், அதற்கு ஆதரவளித்து ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்குரிய முனைப்புக்களை எதிரணியினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்வரும் 10ஆம், 11ஆம் திகதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லாப்பிரேரணை மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வதற்கு தயாராகவே உள்ளதாக சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆணையைப் பெற்ற ஆட்சியாளர்கள் நாட்டு மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டனர். எனவே, கடமை தவறியவர்களை வீட்டுக்கு அனுப்ப ஒன்றிணையுங்கள் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஜே.வி.பி. கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிப்பது என மஹிந்த, மைத்திரி அணிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் என்ன செய்யப்போகின்றன என்பது தான் இப்பொழுது கேள்வியாக எழுந்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன பிரேரணையை எதிர்க்கும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு விரைவில் எடுக்கப்படும் எனவும் அக்கட்சியை மேற்கோள்காட்டி வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
