
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைக்கு சீனாவில் இருந்து சிகரட்டுக்களை இறக்குமதி செய்வது தொடர்பாக பல்வேறு செய்திகள் தற்போது வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றியபோது, நான் வெளிநாட்டு சிகரட்டுக்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்கத் தயாராக உள்ளதாகக் கூறியிருந்தேன்.
ஏனெனில், இன்று புறக்கோட்டைக்கு சென்றால், அனைத்துவகையான வெளிநாட்டு சிகரட்டுக்களையும் கொள்வனவு செய்ய முடியும். இந்திய சிகரட்டுக்கள் மட்டுமன்றி, அங்கு சீன சிகரட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
இவை சட்டவிரோதமான முறையிலேயே நாட்டுக்குள் வருகின்றன. இதனால், சீன தூதுவர் தான் சீன சிகரட்டுக்களை சட்ட ரீதியாக இலங்கைக்குள் இறக்குமதி செய்யலாம் என்ற யோசனையை என்னிடம் முன்வைத்தார்.
இதனால், அரசாங்கத்துக்கும் பாரிய இலாபம் ஏற்படும். அத்தோடு நடுத்தர மக்களுக்கு தேவையில்லாமல் வரிவிதிப்புக்களை மேற்கொள்ள வேண்டியத் தேவையும் இருக்காது. இதனாலேயே சீன சிகரட்டுக்களை சட்டரீதியாக இறக்குமதி செய்தவது தொடர்பிலான யோசனையை நான் முன்வைத்திருந்தேன்.
எனினும், இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் தற்போது எதிர்ப்புக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. புதிய வருமான மார்க்கத்தை உருவாக்கும் நோக்கிலேயே இந்த யோசனையை நான் முன்வைத்திருந்தேன். எனவே, இது தொடர்பாக நாடாளுமன்றுக்கு தெளிவுபடுத்தலை மேற்கொள்ளவும் நான் தயாராகவே இருக்கிறேன்” என கூறினார்.
