
மீண்டும் அரசாங்கம் அமைய பெற்றால் தூக்கு தண்டணையினை பொது மக்கள் தமக்கு தாமே வழங்கிக் கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தூக்கு தண்டனை தற்போது அரசியல் பேசுபொருளாக காணப்படுகின்றது. இதன் காரணமாக ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் மறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் தற்போதும் நீடிக்கும் கருத்து வேற்றுமையே அனைத்து பிரச்சினைக்கும் பிரதான காரணம்.
தூக்கு தண்டனை வழங்குவது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு முரணானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளது பொருத்தமற்றது. தற்போதைய அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் அனைத்திற்கும் தேர்தலின் ஊடாகவே தீர்வு கிடைக்கப் பெறும்.
இதேவேளை பிரதமர் மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீண்டும் அமைய பெற்றால் தூக்கு தண்டணையினை பொதுமக்கள் தமக்கு தாமே வழங்கிக் கொள்வார்கள்” என கூறினார்.
