
கிரண்பேடிக்கு, அரசின் நிர்வாகத்தில் தலையிட அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.
கிரண்பேடி தொடர்பான குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
புதுச்சேரியில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செயற்பாடுகளை எதிர்த்தும், அரச நிர்வாகத்தில் அவரது தலையீட்டை எதிர்த்தும் லட்சுமி நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,
ஆளுநருக்கு தனி அதிகாரமில்லை எனவும், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனையின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடுதான் செயற்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.
கொள்கை ரீதியான விடயங்களுக்கு மட்டுமே ஆளுநரின் அனுமதியைப் பெறவேண்டும் என்பதோடு, ஏனைய விடயங்கள் ஒவ்வொன்றுக்கும் அது தொடர்பான கோப்புகளை அனுப்பத் தேவையில்லை எனவும் அதன் சாராம்சத்தை தெரிவித்தால் போதும் எனவும், அதேபோல் ஆளுநரின் உத்தரவின் பேரில் செயலாளர்கள் செயற்படக்கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய உட்துறை அமைச்சகம் மற்றும் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் குறித்த உத்தரவுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே நிர்வாக ரீதியிலான அதிகாரம் என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பால் புதுச்சேரியில் வளர்ச்சித் திட்டங்கள் கிடப்பில் உள்ளதாகவும் அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்து, கிரண்பேடி மற்றும் மத்திய உட்துறை அமைச்சகத்தின் மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகவும் மனுதாரர்களுக்கு அனுமதியளித்தனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் புதுவை அமைச்சரவை முடிவுகளை செயற்படுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
