ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு பொது மக்களினால் பெரும்பான்மையான ஆதரவு வழங்கப்படுமாயின் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பல மடங்காக அதிகரிக்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அத்துடன், நாடாளுமன்றத்தில் 3 இல் 2 பெரும்பான்மை அதிகாரம் இருந்தும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முடியாமற்போன ராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் ஆட்சியைக் கோருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அற்ற சமகால அரசாங்கம் கடந்த 4 வருட காலப்பகுதியில் நாட்டின் அபிவிருத்திக்காக பாரிய பொறுப்புக்களை நிறைவேற்ற இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
எம்பிலிபிட்டிய பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “சமகால அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கிப் பயணிக்கின்றது.
பெரும்பான்மை பலத்தை கொண்டிராத தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொது மக்களுக்காக பாரிய சேவைகளை நிறைவேற்றியுள்ள இந்த சந்தர்ப்பித்தில் மக்களால் பெரும்பான்மையான ஆதரவு வழங்கப்படுமாயின் நாட்டை மேலும் அபிவிருத்திசெய்ய முடியும்.
வறட்சி, வெள்ளம், பிரதேச சபைத் தேர்தல், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் போன்ற அனைத்து சவால்களையும் நாம் எதிர்கொண்டோம். இதனால் எமது அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்று பொரும்பாலானோர் நினைத்தனர்.
இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு நாம் முன்னோக்கிக் பயணிக்கின்றோம்” என அவர் தெரிவித்தார்.





