
உறைந்த கடலில் வெறும் 76 நாள்களில் 3,506 கிலோமீட்டர் (சுமார் 2176 மைல்) தூரம் பயணம்செய்து ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது. குறித்த வட துருவ நரி எப்படி அவ்வளவு தூரம் சென்றது? எதற்காக இந்த நீண்ட பயணம்?
கடந்த ஆண்டு மார்ச் மாதம், நோர்வேயின் போலார் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு பெண் ஆர்க்டிக் நரியின் மீது GPS பின்தொடரி சாதனம் ஒன்றைப் பொருத்தி, நோர்வேயின் ஷ்வல்பார்ட் தீவில் இருக்கும் ஸ்பிட்ஸ்பேர்கன் (Spitsbergen) பகுதியில் விட்டிருந்தனர்.
ஒரு வயது கூட நிறைவுபெறாத அந்தப் பெண் ஆர்க்டிக் நரி, உணவு தேடி மேற்கை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தது. இந்தப் பயணம் தொடங்கிய 21-வது நாளில் கிறீன்லாந்தை அடைந்திருக்கிறது. 1,512 கிலோமீட்டர் பனியில் நடந்த பயணம் இது. அங்கு சுற்றித்திரிந்த நரி, அத்துடன் நிற்கவில்லை.

ஓய்வெடுத்துக் கொள்ளாமல் தனது அடுத்தகட்ட பயணத்தைத் தொடர்ந்துள்ளது. இறுதியாக 76 நாள்களுக்குப் பின் கனடாவின் எல்லெஸ்மியர் தீவுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது. துருவ நரி பயணித்த தூரத்தைவிடவும் அதன் வேகம்தான் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தது.
ஒரு நாளைக்கு சுமார் 46 கி.மீ தூரம் வரை பயணித்திருக்கிறது இந்த நரி. சில நாள்களில், 150 கி.மீ தூரத்துக்கும் மேல் பயணித்திருக்கிறது.
போலார் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஈவா பியூலி இதுபற்றி கூறுகையில், “முதலில் எங்களால் இதை நம்பமுடியவில்லை. அந்த நரி இறந்திருக்கும், அதை யாரோ படகில் எடுத்துச்செல்கின்றனர் என்றே நினைத்தோம்.
பின்புதான், அங்கு படகுகளே இல்லை என்பது தெரியவந்தது. நரியின் பயணத்தைக் கண்டு அதிர்ந்துபோனோம்” என நோர்வேயின் பொது ஒளிபரப்பு நிறுவனமான NRK-விடம் தெரிவித்திருந்தார்.

ஈவா பியூலி, ஆர்க்டிக் பகுதிகளில் இடம்பெற்று வரும் வேகமான சூழலியல் மாற்றங்களை எப்படி இந்த நரிகள் எதிர்கொள்கின்றன என ஆராய்ச்சி செய்துவருகிறார். “கோடைகாலத்தில் உணவுக்கு எந்தப் பஞ்சமும் இல்லைதான்.
ஆனால், பனிக்காலத்தில் இந்த நரிகளுக்கு உணவு கிடைப்பது என்பது சற்றே சிக்கலாகிறது. இதனால், பெரும்பாலும் வேறு இடங்களுக்கு உணவு தேடி இந்த நரிகள் இடம்பெயர்ந்து செல்கின்றன.
இந்த நரி, இதற்காக இதுவரை பார்த்திராத தூரம் சென்றுள்ளது. இது, இந்த சிறிய விலங்கின் அபார திறனை நமக்கு உணர்த்துகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நரிகளின் பயணம் பாதிப்படைந்ததற்கு உருகிவரும் ஆர்க்டிக் பனிதான் முக்கியக் காரணமாகப் கருதப்படுகின்றது. இதனால் பனிக்காலத்தில் உணவு அதிகம் கிடைக்கும் ஐஸ்லாந்து பக்கம் பயணிக்க முடியாமல் இந்த நரிகள் தவிக்கின்றன.

இது இப்படியே சென்றால், பனிக்காலத்தில் ஷ்வல்பார்ட் தீவு தனித்துவிடப்படும், இதனால் உணவுக்கு வழி இருக்காது என்பது நிதர்சனம். வெப்பநிலை அதிகரித்தால், அங்கிருக்கும் ஒருவகைக் கலைமான் இனம் (Svalbard reindeer) நல்ல வளர்ச்சி பெறலாம் என்பதுதான் ஒரே நம்பிக்கை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பெண் நரியைப் பொறுத்தவரை, சில மாதங்களுக்குமுன் ஜீ.பி.எஸ் கருவியின் செயல்பாடு நின்றுள்ளதால், கனடாவில் அது எந்த மாதிரியான சவால்களைச் சந்திக்கப்போகிறது என யாருக்கும் தெரியாது.
ஆனால், உணவுப்பழக்கம் தொடங்கி பல விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே அதனால் அங்கு உயிர்பிழைக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
