
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் சந்திராயன்-2 திட்டம் தனித்துவம் மிக்கது என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2 விண்கலம் மார்க்-3 ரொக்கெட் மூலம் இன்று (திங்கட்கிழமை) பிற்கபல் 2:43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், செப்டம்பர் 8ஆம் திகதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘இது பெருமிதமான தருணம்’ என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். சந்திராயன்-2 விண்கலம் ஏவப்படுவதை நேரில் இருந்து கண்காணித்த அவர் பின்னர் இந்த திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு நேரில் பாராட்டு தெரிவித்தார்.
இதனிடையே, இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ‘‘சந்திராயன்-2 திட்டம் தனித்துவம் மிக்கது. ஏனெனில் இதுவரை யாரும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்கிறது. இந்த திட்டம் நிலவு குறித்த புதிய அறிவை அளிக்கும். இதுபோன்ற திட்டங்களால் இந்திய இளைஞர்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நோக்கி ஈர்க்கப்பட வாய்ப்பாக அமையும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில் ‘‘சந்திரயான் -2 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் தருணம். திட்டத்தில் பணியாற்றும் இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள். இஸ்ரோ தொழில்நுட்பத்தின் புதிய உயரங்களை எட்ட விரும்புகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.
