
இந்த கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க., வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 21 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
அ.ம.மு.க.வின் ஒரே எம்.எல்.ஏ.வான டி.டி.வி. தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும் இந்த முக்கியமான கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை.
தி.மு.க. தரப்பில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், வி.சி.க. சார்பில் தொல்.திருமாவளவன், ரவிக்குமார், மதிமுக சார்பில் மல்லை சத்யா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட தலைவர் கலந்துகொண்டனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு தரும் சட்டத்தை மத்திய அரசு அவசரமாக நிறைவேற்றியுள்ளதாக குற்றம் சாட்டினார். மத்திய அரசின் இந்த சட்டம் இடஒதுக்கீடு கொள்கையை நீர்த்த்துப்போகச் செய்யும் என்றும், இந்த கொள்கையை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்றும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
25% எம்.பி.எஸ். இடங்களை கூடுதலாக தருவதாக கூறி மத்திய அரசு சொல்வதை நம்பி 10% இடஒதுக்கீட்டை ஏற்கக்கூடாது என்று தெரிவித்தார்.
காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா என எவருமே இட ஒதுக்கீட்டில் சமரசம் செய்ததில்லை என்றும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 10% இடஒதுக்கீடு சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
சமூகநீதியை காக்க அரசு எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் எதிர்கட்சியான திமுக முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று அனைத்துகட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன்
தமிழக அரசு நெருக்கடிகளுக்கு அடிபணிந்து 10% இடஒதுக்கீடு என்ற வரலாற்று பிழையை செய்துவிடவேண்டாம் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேசியதை அடுத்து பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
கல்வியில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 10% இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் அரசியல் ஆதாயத்துக்காக கொண்டுவரப்பட்டதாகும் என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு
கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கட்டிக்காத்து வருவதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 10% இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசு விண்ணப்பித்தால் கூடுதலாக 1,000 மருத்துவ இடங்களை பெற முடியும், என்றும், நடைமுறையில் உள்ள ஒதுக்கீட்டின் படி 586 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு பிரிவுக்கு கூடுதலாக கிடைக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழிசை
10% இடஒதுக்கீடு உயர்சாதியினருக்கானது என்று கருதிவிட கூடாது என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழிசை தெரிவித்தார். உயர்வகுப்பு ஏழைப்பு இடஒதுக்கீடு அளிப்பது சமூகநீதிக்கு எதிரானது அல்லது என்றும், 10% இடஒதுக்கீட்டை செயல்படுத்தினால் தமிழகத்திற்கு அதிக மருத்துவ இடங்கள் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
69% இடஒதுக்கீட்டுக்கு பங்கம் வராமல் 10% இடஒதுக்கீட்டை செயல்படுத்தினால் ஏன் ஏற்க கூடாது என்று தமிழிசை கேள்வி எழுப்பினார். 10% இடஒதுக்கீடு ஏற்றத்துக்கான திட்டமே தவிர ஏமாற்றத்துக்கான திட்டம் அல்ல என்று தெரிவித்தார்.
காங்கிரஸ்
69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் 10% இடஒதுக்கீடு வழங்குவதை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கிறது என சென்னையில் நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். முற்பட்ட வகுப்பினருக்கு பொதுவாக 10% ஒதுக்கீடு தராமல் எண்ணிக்கை அடிப்படையில்தான் ஒதுக்கீடு தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
கி.வீரமணி
பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு வேறு வகையில் உதவி செய்யலாம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் எதிர்ப்பு
10% இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
