
இந்திய விமான போக்குவரத்துத் துறை தலைமையகத்துடன் இந்திய விமானச் சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் பயணிகளின் பாதுகாப்புக் கருதி ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் இந்திய விமானங்கள் போக்குவரத்தை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது.
அண்மையில், ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரானும், அமெரிக்காவும் ஒருவர்மீது ஒருவர் குற்றஞ்சாட்டினர்.
இதற்கிடையே, ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்தியத்திற்குள் சென்ற அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.
தென்கிழக்கில் ஓமன் குடாவையும், தென்மேற்கில் பாரசீகக் குடாவையும் கொண்டு அமைந்துள்ள ஒரு குறுகலான கடற்பரப்பின் அருகாமையில் இந்த ஹோர்மஸ்கான் பிராந்தியம் அமைந்துள்ளது. இதன் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு அமீரகமும், ஓமன் நாட்டின் ஒரு பகுதியான முசாந்தமும் அமைந்துள்ளது.
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்த பின்னர் அப்பகுதிக்கு உட்பட்ட வான்வெளி வழியாக வெளிநாட்டு விமானங்கள் போக்குவரத்தை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்துகின்றன.
இந்நிலையிலேயே இந்தியாவும் இந்த முடிவை எடுத்துள்ளது.
