
நாட்டு மக்களின் வரிப் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி உணவகங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்த வழக்கில் இஸ்ரேல் பிரதமரின் மனைவியான சாரா நெதன்யாகுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு எண்-1000 எனப்படும் வழக்கிலேயே நேதன்யாகுவின் மனைவி சாரா மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சில சலுகைக்களுக்காக ஹொலிவூட் திரைப்படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் அவுஸ்ரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 இலட்சம் அமெரிக்க டொலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை இலஞ்சமாக பெற்றிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், பிரதமருக்கான அதிகாரப்பூர்வ அரச இல்லத்தில் சமையல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் இருந்தபோதும், மக்கள் பணத்தை பயன்படுத்தி, விதவிதமான உணவுகளை பிரபல உணவகங்களில் இருந்து பெற்றுக்கொண்டமை தொடர்பாகவும் சாரா நேதன்யாகு மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தனது குற்றத்தை சாரா நெதன்யாகு ஒப்புக்கொண்டதாலும், குறைந்தபட்சமான தண்டனை அளிக்குமாறு கேட்டுக் கொண்டதாலும் அவருக்கு சுமார் 2800 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதித்து ஜெருசலேம் நகர நீதிமன்ற நீதவான் அவிட்டால் சென் தீர்ப்பளித்தார். அத்துடன், முறைகேடாக செலவு செய்யப்பட்ட மக்களின் பணத்தையும் அரச திறைசேரிக்கு செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும் யூதர்களை கொண்ட நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996 முதல் 99 வரை அவர் பிரதமராக இருந்துள்ளார்.
அவரது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருட்கள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் ஒப்பந்தம் பேசியதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தமையும் குறிப்பிடத்தக்கது.
