
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடற்தொழிலாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு இதுகுறித்த மனுவை இன்று (புதன்கிழமை) கையளித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உட்பட்ட சாலைப் பகுதியில் தங்கியுள்ள தென்னிலங்கை கடற்தொழிலாளர்கள் 500இற்கும் மேற்பட்டோர், படகுகள் வைத்து தொழில் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கான தொழில் அனுமதி கடற்தொழில் அமைச்சினால் கொடுக்கப்பட்ட போதும் அட்டை பிடிப்பு என்ற பெயரில் அனுமதியினைப் பெற்று சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
இதனால் வடக்கில் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து, அவர்கள் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டம் சாலைப் பகுதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளான மாவட்ட செயலாளர், கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி, பிரதேச செயலாளர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர், கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசம், முன்னாள் வட. மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன இயக்குநர் உள்ளிட்டவர்களுக்கு மீனவர்களால் மனு கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும் மனு கையளித்துள்ளார்கள்.
இவ்வாறான சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தப்படாவிடின் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டத்தினை ஒன்றிணைத்து கடற்தொழிலாளர்கள் பாரிய போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக எச்சரித்துள்ளார்கள்.
இது குறித்து மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை பகுதியில் இருந்து அட்டை பிடிப்பு தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் சாலைப் பகுதியில் நிலைகொண்டு 40 குதிரைவலுக்கொண்ட இயந்திரங்களைப் பாவித்து இரவு பகலாக சாலையில் இருந்து யாழ்ப்பாணம், காங்கேசன் துறைவரை தமது சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் கரையோர வளம் பாதிக்கப்பட்டுள்ளது.
அட்டை பிடிப்பு என்ற பெயரில் வந்து பலநோக்கங்களுடன் வடக்கு கடலில் உள்ள வளங்களை அள்ளிச் செல்கின்றார்கள். அத்துடன் சட்டவிரோத போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் கடத்துகின்றார்கள். எனவே எமது மக்களின் வளங்களையும், வாழ்வாதாரத்தினையும் பாதுகாத்து தரவேண்டும்” என அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
