
இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரச தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி முதலாம் திகதி, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விற்கவும் அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக முறைப்பாடு எழுந்த நிலையில் இந்த அபராதம் விதிக்கும் நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது.
இதற்காகவென்றே சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள், சேமித்து வைப்பவர்கள், வணிக ரீதியாக பயன்படுத்தும் வியாபாரிகள், பொதுமக்கள் என ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து முதன்முறை பிடிப்பட்டால் 25 ஆயிரமும், இரண்டாவது முறை ஐம்பதாயிரமும், மூன்றாவது முறை சிக்கினால் ஒரு இலட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படவுள்ளது. நான்காவது முறையாக பிடிபட்டால், விற்பனை செய்பவரின் கடை உரிமம் இரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுமக்களுக்கு, அதிகாரிகள் வீடுகளில் சோதனை செய்யும்போது பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்தால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
