
டி.டி.வி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை தொடர்ந்து அ.ம.மு.கவில் இருந்து விலகிய தங்க தமிழ் செல்வன் இன்று (வெள்ளிக்கிழமை) தி.மு.கவில் இணைந்துகொண்டார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் இணைந்துக் கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அ.ம.மு.கவின் கொள்கைப்பரப்பு செயலாளராக செயற்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி தினகரனை விமர்சித்து பேசிய ஒலிப்பதிவு வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து தங்க தமிழ்ச்செல்வனை அ.ம.மு.கவில் இருந்து நீக்கப்போவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அ.ம.மு.கவில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.கவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கு அ.தி.மு.கவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.கவில் இணைந்து கொண்டுள்ளார்.
