தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முகிலன் காணாமற்போனமை குறித்த வழக்கு விசாரணையில் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி தெரிவித்துள்ளது.இது குறித்த வழக்கு விசாரணை இன்று (வியாழக்கிழமை) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது முன்னிலையாகியிருந்த சி.பி.சி.ஐ.டியினர் முகிலன் குறித்த அறிக்கையொன்றை சமர்பித்திருந்தனர்.
குறித்த அறிக்கையில், முகிலன் குறித்து கிடைத்துள்ள தகவல்களை வெளியில் கூறினால் விசாரணைகள் பாதிக்கப்படும் என சி.பி.சி.ஐ.டியினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரேர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்துவந்த முகிலன், கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி சென்னையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பின்னர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.





