பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் கைது செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் ஆதரவாளர்கள் மூவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்ட இப்திகார், முகமது அஜ்மல் மற்றும் பிலால் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நேற்று நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவர்கள், இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலில் முக்கியஸ்தர்களாக செயற்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயற்படுபவர்கள் மற்றும் அவர்களுக்கு நிதி வழங்குவோரை கைது செய்துவருகின்றனர்.
இவ்வாறு உதவியதாக பலர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ஏராளமான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





