
எதிர்வரும் ஜூலை 07 ம் திகதி அணுசக்தி உடன்படிக்கையில் புதிய நடவடிக்கைகளை முன்னெக்கவுள்ளதாக ஈரான் உயர் தேசிய பாதுகாப்பு ஆணையகத்தின் செயலாளர் அலி ஷம்கானி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், 2015 அணுசக்தி உடன்படிக்கையை மீறுவது ஒரு கடுமையான தவறு என்றும், பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு புரிதலை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், அதனை ஈரான் விரும்பாதது கண்டிக்கத்தக்கது என்றும் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லு ட்ரயன் எச்சரித்துள்ளார்.
ஈரான் உடன்படிக்கையை மீறுவது தவறு என்பதுடன், அது அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மோசமான பிரதிபலிப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2015 ம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து கடந்த வருடம் அமெரிக்கா விலகியது.
இதனையடுத்து, ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த தருணத்தில், ஈரான் தனது அணுசக்தி உறுதிப்பாட்டை மீறுவது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என்ற எச்சரிக்கையை முன்வைப்பதற்கு பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அணிதிரட்டுள்ளதாகவும் பிரான்ஸ் வெளிவிவகாரத் துறை அமைச்சர் கூறினார்.
மேலும், இந்த நிலைமையை விரிவுபடுத்துவதற்கு ஐரோப்பியர்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
