
அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், ஈரான் மீது பறந்த அமெரிக்க உளவு விமானம் கடந்த வாரம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இது அமெரிக்காவுக்கு கடும் சினத்தை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பதிலடி வழங்கும் நோக்கில் அமெரிக்கா ஈரான் மீது பாரிய பொருளாதார தடைகளை ஏற்படுத்தியது.
மேலும் ஈரானிய தலைவர் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கான நிறைவேற்று ஆணையில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இந்த புதிய பொருளாதார தடைகளால் ஈரான் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அத்துடன் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையையும் நிராகரித்துள்ளதாக ஈரான் நாட்டின் ஐக்கிய நாடுகள் தூதுவர் மஜித் தாகத் ரவாஞ்சி தெரிவித்துள்ளார்.
ஈரான் மக்கள் மீதான பொருளாதார போரை அமெரிக்கா நிறுத்த வேண்டும். அச்சுறுத்தும் போக்கு தொடரும்பட்சத்தில், பேச்சுவார்த்தையை நடத்த முடியாது. அச்சுறுத்தல் இருக்கும் வரை, ஈரானும் அமெரிக்காவும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை தொடங்க எந்த வழியும் இல்லை. அத்தகைய பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை.
பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் ஐக்கிய நாடுகள் தனது பங்களிப்பை வழங்கும்படி கோரியுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
