அபாய அளவில் விஷ வாயுவை வெளியேற்றுகின்றது என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அபாய அளவில் விஷ வாயுவை வெளியேற்றும் ஒரே ஆலை ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே என்று சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாசு ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலையை நீதிமன்றமோ, அரசோ கண்மூடி வேடிக்கைப் பார்க்கக் கூடாது என்றும் 3,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை பல ஆண்டுகளாக 2000 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டியுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலை நட்டம் அடைந்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு தவறானது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது என்பதற்கு ஆதாரப்பூர்வமான தகவல்களும் தமிழக அரசிடம் இல்லை.
இந்த விவகாரத்தில் தங்களது நிறுவனத்துக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. அனைத்து விதமான விதிமுறைகளையும் பின்பற்றியே ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படுகிறது.
எனவே ஆலையை மூடி சீல் வைத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு சட்ட விரோதமானது. எனவே மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து, ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
