
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது, தனி சமஸ்தானமாக இருந்த ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதை எதிர்கொள்ள பாகிஸ்தான் தரப்பில், நிஜாமுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. அதற்கு பிரதி உபகாரமாக, 1948 ஆம் ஆண்டு, ஹைதராபாத் நிஜாமின் பத்து லட்சத்து எண்ணூறு (10,00800.00) பவுண்ட்ஸ் பணம், இங்கிலாந்தில் இருந்த பாகிஸ்தான் தூதுவர் ஹபிப் இப்ராகிம் ரஹிம்தூலாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அந்தப் பணம், பாகிஸ்தான் தூதுவர் பெயரில் லண்டனில் உள்ள நற்வெஸ்ற் (NatWest) வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டது.
பின்னாளில், அப்பணத்தை நிஜாம் மீளக்கோரியிருந்தார். பாகிஸ்தான் மறுக்கவே, யார் உரிமையாளர்? என்று தெளிவான பிறகு பணத்தை ஒப்படைப்பதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது.
இதுதொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது. நிஜாமின் வாரிசுகள், இந்திய அரசுடன் கைகோர்த்து வழக்கை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2 வாரங்களாக இறுதிக்கட்ட விசாரணை இடம்பெற்றது. இதையடுத்து, இன்னும் 6 வாரங்களில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டன் வங்கியில் உள்ள பணம், தற்போது 3 கோடியே 50 லட்சம் பவுண்ட்களாக (இந்திய மதிப்பில் ரூ.315 கோடியாக) பெருகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
