
விமானம் ஒன்று லண்டன் ஸ்ரான்ஸ்ரெட் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக எயார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூவேர்க் விமான நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்த AI191 என்ற பயணிகள் விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுதொடர்பாக எயார் இந்தியா விமானசேவையின் ருவிற்ரர் பதிவில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும், பின்னர் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே தரையிறக்கப்பட்டதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
றோயல் விமானப்படையின் ரைபூன் ஜெட் விமானங்களின் வழித்துணையுடன் குறித்த பயணிகள் விமானம் தரையிறக்கப்பட்டதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காலை 10:15 அளவில் ஸ்ரான்ஸ்ரெட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது பற்றி தெரியவில்லை என்று ஸ்ரான்ஸ்ரெட் விமானநிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
