
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இன்று சாட்சியமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தெரிவுக்குழு விசாரணைக்கு சென்று சில நிமிடங்களில் அவர் திரும்பிச் சென்றுள்ளார்.
தெரிவுக்குழுவில் முக்கிய மூன்று உறுப்பினர்கள் சமூகமளிக்காத நிலையில், ரிஷாட் பதியுதீனின் வாக்குமூலம் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மதியம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரிஷாட் பதியுதீன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெரிவுக்குழுவில் முன்னிலையானார் இராணுவத் தளபதி
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க முன்னிலையாகியுள்ளார்.
அவர் தற்போது அங்கு சாட்சியம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளனர்.இதற்கமைய அவர்கள் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு கூடவுள்ள விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளனர்.
இதன்போது முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவர் சாட்சியமளிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர், கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்தின் பொது முகாமையாளர் ஆகியோரும் இன்று தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு இதுவரையில் ஏழு தடவைகள் கூடியுள்ளது.
இதுவரை இடம்பெற்ற அமர்வுகளில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, காத்தான்குடி பொலிஸில் சேவையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் தற்போதைய பொறுப்பதிகாரி ஆகியோருடன், முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதி உள்ளிட்டவர்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.
இவர்கள் வழங்கிய சாட்சியங்கள் மூலம் பல உண்மைகள் அம்பலமாகியுள்ளன. இதனையடுத்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டன. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரியிருந்தார்.
எனினும் சர்ச்சைகளுக்கு மத்தியில் குறித்த குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
