விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் அமெரிக்க ரகசியங்களைக் கசியவிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக அவரை தமது நாட்டுக்கு நாடு கடத்துமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டது.
அமெரிக்காவின் கோரிக்கையைப் பரிசீலித்த பிரித்தானிய உள்துறை அமைச்சு ஜூலியன் அசாஞ்சினை நாடுகடத்த அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை வெஸ்ற்மின்ஸ்ரர் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது உள்துறை அமைச்சரால் கையொப்பமிடப்பட்ட நாடுகடத்தும் உத்தரவு மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜூலியன் அசாஞ்சினை நாடுகடத்தும் உத்தரவுக்கான முழுமையான விசாரணையை அடுத்த ஆண்டு மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் எம்மா ஆர்புத்நொட்(Emma Arbuthnot) நாடுகடத்தும் உத்தரவுக்கான முழுமையான விசாரணையை 2020 பெப்ரவரி 25 இல் 5 நாள் அமர்வாக விசாரணை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றபோது வீடியோ அழைப்பு மூலம் பேசிய ஜூலியன் அசாஞ் தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்த வேண்டாம் என்றும் தனது வாழ்க்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது என்றும் கூறினார்.
அவரது வழக்குரைஞர் மார்க் சம்மர்ஸ் (Mark Summers QC) தெரிவிக்கையில்; நாடுகடத்தல் விடயமானது பெரும் பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது என்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்கா சார்பான வழக்குரைஞர் பென் பிரண்டன் (Ben Brandon) தெரிவிக்கையில்; அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை அசாஞ் தனது இணையத்தளத்தில் கசியவிட்டார் என்றும் குறிப்பாக ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களோடு தொடர்புபட்டவை என்றும் அமெரிக்க வரலாற்றில் அமெரிக்காவிற்கு மிகவும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜூலியன் அசாஞ்சிற்கு ஆதரவானவர்கள் அவரை விடுதலைசெய்ய வேண்டும் என்று வெஸ்ற்மின்ஸ்ரர் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு வெளியே நின்று குரலெப்பியுள்ளனர்.
