
குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த கித்சிறி ஜயலத்திடம் சி.ஐ.டி.யினர் சிறப்பு விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடியில் உள்ள சமூக கொள்ளை தொடர்பான விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட அவரிடம் அங்கு 8 மணி நேர விசாரணை நடத்தப்பட்டு சிறப்பு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக சி.ஐ.டி.யின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சட்ட விரோத கருத்தடை விவகார குற்றச்சாட்டுக்களில் வைத்தியர் மொஹம்மட் ஷாபி சி.ஐ.டி.யில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
சிங்கள, பெளத்த பெண்களுக்கு கருத்தடை செய்ததாக தேசிய பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்திக்கான ஆரம்ப தகவலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் வழங்கியதாக கூறப்படும் விடயம் மற்றும் வைத்தியர் ஷாபி குறித்து சட்ட விரோத சொத்துக் குவிப்பு தொடர்பினை மையப்படுத்தி பிரதி பொலிஸ் மா அதிபர் முன்னெடுத்த விசாரணைகள் தொடர்பாக இதன்போது விரிவாக விசாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயலத்திடம் விஷேட வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்துகொண்டுள்ள சி.ஐ.டி. அவசியம் ஏற்படும் பட்சத்தில் மீளவும் விசாரணைக்கு அழைப்பதாக கூறி விடுவித்துள்ளது.
