
ளை எவரும் சீண்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துவதில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் உள்ளதே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயத்தில் தனது நிலைப்பாடு தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தங்களது இனத்தின் மீதான அடக்குமுறைகள் உச்சத்திற்கு சென்று கொண்டிருந்தபோது முஸ்லிம்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இராஜினாமா செய்தார்கள்.
அது கூட தாங்கள் இருக்கும் அரசுக்கு எதிராக செய்யவில்லை. தாம் இருக்கும் அரசுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று தான் இராஜினாமா செய்தார்கள். இனவாத சிந்தனை உள்ள சிங்கள மேலாதிக்க அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அவர்கள் இவ்வாறு செய்தார்கள்.
ஞானசார தேரரும் ரத்தின தேரரும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் நாட்டையே மீண்டும் இனப் படுகொலைக்குள்ளும் கலவரத்துக்குள்ளும் தள்ளும் நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது.
ஆகவே தான் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை எடுத்தார்கள். இந்நிலையில் தமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை.
அவரசகால தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னரும் கூட அநாவசியமாக எமது இளைஞர்கள் மீது இவர்கள் கை வைப்பார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. ஆகவே இவ்வாறான நடவடிக்கைகளை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். அவ்வாறான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கக்கூடாது என தெரிவித்திருந்தோம்.
இது ஐ.எஸ் தீவிரவாத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட அவசரகால தடைச்சட்டம். எனவே அதை நோக்;கியே உங்கள் நகர்வுகள் இருக்க வேண்டுமே தவிர அநாவசியமாக தமிழ் இளைஞர்கள் மீது கை வைக்கும் செயற்பாட்டை எடுக்கக்கூடாது என நாங்கள் தெளிவாக சொல்லியிருந்தோம்.
அவரசகால தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் இராணுவம் அதனை தன் கையில் எடுத்துக்கொண்டு சோதனை என்ற ரீதியில்; வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் பாடசாலைகளுக்கு முன்பாகவும் செயற்பட்டு வரும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
