
அத்துடன் நிலத்தொடர்பை காரணங்காட்டி தரமுயர்த்தலுக்கு தடைபோட முடியாது எனவும், கிழக்கு மாகாணத்தில் பல கல்வி வலயங்களும் பிரதேச செயலகங்களும் நிலத்தொடர்பு அற்றவகையிலேயே தரமுயர்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு முன்னெடுக்கப்பட்ட போராட்ட இடத்திற்கு இன்று (சனிக்கிழமை) சென்ற அவர் அங்கு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “கல்முனை உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
33 ஆயிரம் தமிழ் மக்களையும் வெறுமனே 3000 முஸ்லிம் மக்களையும் கொண்ட 29 கிராமசேவகர் பிரிவைக்கொண்ட இந்த பிரதேச சபையை தரமுயர்த்தும் கோரிக்கை 1993ஆம் ஆண்டுகளிலேயே அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற விடயமாக இருக்கிறது. இன்னுமொரு தடவை அமைச்சரவை அங்கீகாரத்தை பெறவும் தேவையில்லை.
காலத்திற்குக் காலம் மாறிவந்த ஆட்சியாளர்கள் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றாதுவிட்டமை அவர்களுடைய தவறாகும். நிலத் தொடர்பற்ற முறையில் இதனை அங்கீகரிக்க முடியாது எனச் சொல்வது இலங்கையில் வெறுமனே கல்முனை பிரதேச செயலகத்திற்கு மட்டுமே உரித்தான சட்டமாக இருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் பல கல்வி வலயங்களும் பிரதேச செயலகங்களும் நிலத்தொடர்பு அற்றவகையிலேயே தரமுயர்த்தப்பட்டிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். முஸ்லிம்களுக்கு ஒரு நியாயம் தமிழர்களுக்கு ஒரு நியாயம் என பார்க்க முடியாது. இது ஒட்டுமொத்த தமிழர்களுடைய பிரச்சினை என்ற அடிப்படையில் நாங்களும் இந்தப் போராட்டத்திற்கு எங்களுடைய ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
எனவே, தமிழ் தலைமைகள் உடனடியாக காலதாமதமில்லாமல் நியாயமான கோரிக்கையை கருத்திற்கொண்டு அரசாங்கத்திற்கு கொடுக்கின்ற ஆதரவை உடன் விலக்க வேண்டும். அதன் மூலம் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கமுடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டால் உடனடியாக கல்முனை உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்த முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
