
மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகள் அனைத்திலும் மாணவர்கள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் குறித்த தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் James Merlino தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பாடசாலைகளில் மாணவர்கள் கைத்தொலைபேசியை பயன்படுத்துவதால் கல்வியில் அவர்களால் போதியளவு கவனம் செலுத்த முடியாதுள்ளது.
அத்துடன், கைத்தொலைபேசிகளின் ஊடாக ஏனைய மாணவர்களின் மீது துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுவதும் அவதானிக்கப்பட்டிருக்கிறது.
மாணவர்கள் பாடசாலைகளுக்கு வரும்போது தங்களது கைத்தொலைபேசியை அணைத்து அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் வைத்துவிட்டு வகுப்புக்களுக்கு வரவேண்டும்.
மாணவர்களுடன் தொடர்புகொள்ள விரும்பும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பாடசாலை தொலைபேசிக்கு அழைத்து பேசமுடியும்.
வகுப்பு நேரங்களிலும் கைத்தொலைபேசியை வைத்திருக்கவேண்டிய விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கு இந்தக்கட்டுப்பாட்டில் விதிவிலக்கு அளிக்கப்படும்.
இதற்கான தகுந்த காரணங்கள் பாடசாலை நிர்வாகத்தினால் பரிசீலிக்கப்பட்டு அந்த அனுமதி வழங்கப்படும்’ எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
